அதிமுகவுடன் கூட்டணி வைத்த அன்புமணி ...ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்!

பாமக என்பது தனி ஒருவர் தொடங்கிய கட்சி யாரும் உரிமை கொண்டாட முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

anbumani ramadoss admk ramadoss

சென்னை :தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று காலை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்துக்கு பாமக தலைவராக கூறப்படும் அன்புமணி ராமதாஸ் சென்றார்.

சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இபிஎஸ், ஏற்கெனவே உறுதியான அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாகவும், இது இயற்கையான மற்றும் வெற்றிக் கூட்டணி என்றும் அறிவித்தார். இது கட்சியினரும் தொண்டர்களும் விரும்பியவாறு அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார். “எனது மகன் எனக்கே வேட்டு வைப்பார் என்று எனக்கு அப்போது தெரியவில்லை” என்று கூறிய அவர், மத்திய அமைச்சர் பதவி கொடுத்த நபரே தனக்கு துரோகம் இழைத்ததாக வேதனை தெரிவித்தார்.

அன்புமணி செய்த தில்லுமுல்லுகள் காரணமாகவே அவரை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.பாமகவை தான் ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைத்து வளர்த்ததாகக் கூறிய ராமதாஸ், இது தனி ஒருவர் தொடங்கிய கட்சி என்றும், யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். கட்சியிலேயே இல்லாத அன்புமணி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஒரு கூத்து என்று விமர்சித்த அவர், அன்புமணியின் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், பாமக தொண்டர்கள் தன்னிடம்தான் உள்ளனர் என்று கூறிய ராமதாஸ், தனது தலைமையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதை சாட்சியாகக் காட்டினார். “பாமக கட்சி என்னிடம்தான் உள்ளது” என்று உரிமை கொண்டாடிய அவர், தான் அமைக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.அன்புமணி ஒரு கட்சியுடன் பேசி ஒப்பந்தம் போட்டாரா அல்லது கையெழுத்து போட்டாரா எனத் தெரியாது என்று கூறிய ராமதாஸ், தான் சேரும் கூட்டணிதான் உண்மையானது என்று வலியுறுத்தினார். “தந்தைக்கு துரோகம் இழைத்தவருக்கு யார் ஓட்டு போடுவார்கள்?” என்று கேள்வி எழுப்பிய அவர், தனது தலைமையிலான பாமகவே அடுத்த ஆட்சியை அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.