த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தையா? விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

கூட்டணி குறித்து நாங்கள் இதுவரை தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

TVK VIJAY EPS

சென்னை :தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. ஏற்கனவே பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்டு விட்டது. அதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் த.வெ.க கூட்டணி வைக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

அதற்கு முக்கியமான காரணமே, எடப்பாடி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது நாமக்கல் கூட்டத்தில் த.வெ.க. கொடிகள் பறந்ததைப் பார்த்து, பழனிச்சாமி “அங்க பாருங்க கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க..” என்று கூறி தொண்டர்களை சிரிக்க வைத்தார்.இந்தப் பேச்சு, த.வெ.க. உடனான சாத்தியமான கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. அதில் இருந்து த.வெ.க அதிமுக கூட்டணியா என்கிற கேள்விகள் தான் அரசியல் வட்டாரத்தில் எழுந்து கொண்டு இருக்கிறது.

இப்படியான சூழலில், இன்று முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்தநாள் மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு, அதிமுக தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, தேவரின் சமூகப் போராட்டங்களை நினைவுகூர்ந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் பிரசார கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் பங்கேற்றது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டபோது பதில் அளித்தார்.

இதுகுறித்து பேசிய அவர் ” 2026-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து நாங்கள் இதுவரை தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதைப்போல தான் தவெகவும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிமுக கூட்டத்தில் தவெக கொடி குறித்தே விளக்கம் அளித்தேன்” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.