புதுக்கோட்டை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார உத்தியை கடுமையாக விமர்சித்தார்.
விஜய் “தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி” என்று கூறுவதைச் சுட்டிக்காட்டிய சீமான், “ஆனால் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி தொகுதிக்கு பரப்புரை செய்ய விஜய் போகவில்லை. கொள்கை எதிரியான பாஜக தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பரப்புரை செய்யவில்லை. நேரடியாக என்னுடைய தொகுதிக்கு வருகிறார். அப்படி என்றால் யாருக்கு போட்டியாக பரப்புரை செய்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.
மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாகவும் சீமான் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:“பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவதாகச் சொல்லி, ஆண்களுக்கான எண்ணிக்கை குறையக் கூடாது என்பது ஆணாதிக்க சிந்தனை. தொகுதிகளை அதிகரித்தால்தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்பது என்ன மாதிரியான மனநிலை?”தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய சீமான், “நான் காரைக்குடிக்கான ஆள் இல்லை. ஒட்டுமொத்த தமிழ்குடிக்கான ஆள். நாட்டையே வெல்ல போராடுகிறேன்” என்று உறுதியாகக் கூறினார்.
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரத்தில் பியூஷ் கோயல் “படிப்பறிவு இல்லாதவர்கள் தான் எதிர்க்கிறார்கள்” என்று பேசியதற்கு சீமான் கடும் பதிலடி கொடுத்தார்.“நீங்கள் படிப்பறிவு இருந்து என்ன பண்ணீங்க? மதத்தை முன்னிறுத்தி உலகத்தில் எவனாவது அரசியல் செய்வானா? இது படித்தவர்கள் செய்யும் செயலா? நீங்கள் செய்வீர்களா?மதம் அரசியலாகி அதிகாரத்துக்கு வந்தால் அங்கே மனித நேயம் என்ற ஒரு விஷயம் தேவை. இறை மாதிரி இருந்து ஆட்சி செய்ய வேண்டும். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்களுக்கு இறை என்று வைக்கப்படும் என்று என்னுடைய வேதம் சொல்லுகிறது.
இறைவன் கேட்கும் உயிருக்கும், கேட்கும் திறனற்ற உயிருக்கும், புல், பூண்டு, நாய், நரி எல்லாவற்றுக்கும் வேண்டியதைக் கொடுப்பான் என்றுதான் இறைவன். அப்படி ஆட்சி செய்ய வேண்டும். அவன்தான் தலைவன்.அதை விட்டுவிட்டு, ‘நீ இந்த மதத்துக்குத்தான் ஆடு, இந்த மதத்துக்குத்தான் செய்வேன்’ என்றால் இது படித்தவர்கள் செய்யும் செயலா? படித்து என்ன பண்ணீர்கள்?எஸ்.ஐ.ஆர். கொண்டு வந்தீர்கள். அதற்குக் காரணம் என்ன? சீர்திருத்தம். இறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்கள். இறந்தவர்கள் சான்றிதழ் சமர்ப்பித்திருக்கிறார்கள். ஒப்படைத்திருக்கிறார்கள். அதில் இருக்கும் சலுகையை எடுத்து, ஒரு நிலத்தில் பயிர் இருந்தால் களை மட்டும்தான் எடுக்க வேண்டும். அவன்தான் விவசாயி.
மொத்தமாக அழித்துவிட்டு மறுபடியும் நடுவோம் என்றால் இது எப்படிப்பட்ட செயல்? இது படித்தவர்கள் செய்யும் செயலா?எஸ்.ஐ.ஆர். ஏன் கொண்டு வந்தீர்கள்? ஏன் கொண்டு வந்தீர்கள்?”சீமானின் இந்தக் கேள்விகள் மற்றும் விமர்சனங்கள், தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
