நெல்லை :தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்றைய தினம் (ஆகஸ்ட் 3) நெல்லையில் உள்ள தனது வீட்டில் பிரம்மாண்டமான விருந்து அளித்தார். இந்த விருந்து, தேர்தல் பிரச்சாரத்திற்காக நெல்லை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 109 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. மேலும் இந்த விருந்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு, பாஜக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இரு கட்சிகளின் உறவை பலப்படுத்துவதற்கான அரசியல் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.
விருந்துக்கு முன்னதாக, பாஜக மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்களுடன் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு, பாஜக-அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், சுதாகர் ரெட்டி, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
