”பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்”- அன்புமணி.!
பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், ஆகியோர் நேற்றைய தினம் உடல்நலக் குறைவு எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 19) சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, “பாமக சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருவரும் பூரணமாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் குணமடைய வேண்டும் என கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்” என்றார். இது, கட்சியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான முயற்சியாகவும், உள் முரண்பாடுகளை மறைமுகமாக மறுப்பதற்கான நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
அதாவது, பாமக எம்எல்ஏக்களான ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகிய இருவரும் கட்சியின் உள் முரண்பாடுகள் காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸுடன் இருப்பதால், பாமக தலைவர் அன்புமணி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்ப்பதற்காக நெஞ்சுவலி எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என அரிசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், பாமகவின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவுமானஜி.கே.மணி, சென்னை அப்போலோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவான அருள், அதே காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.