சென்னை :நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் “ஈரோடு இடைத்தேர்தலில் திமுக-நாம் தமிழர் போட்டி, 2026 தேர்தலில் திமுக-த.வெ.க. போட்டி” என்ற கருத்துக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார். “அதிமுகவை எதிர்த்தால் திமுக B-டீம், பெரியாரை எதிர்த்தால் பாஜக ஆதரவாளர் என்று கூறுகிறார்கள். திமுக காசு கொடுக்காமல் ஒட்டு வாங்க முடியுமா?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
அரசியல் என்பது மக்கள் மீது அதிகாரம் செலுத்துவது அல்ல, 15 ஆண்டுகளாக நெருக்கடிகளை சந்தித்தாலும் கூட்டணி வைக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார். சிறுபான்மையினர் ஆதரித்திருந்தால் 40% வாக்குகள் கிடைத்திருக்கும் என்றும் கூறினார். சீமான், “என்னைப் பார்க்க வரும் கூட்டம் ரசிகர் கூட்டம் அல்ல, கருத்தியல் மணிகள் – போராளிகள் கூட்டம்” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், “நான் வைத்திருப்பது பதர்கள் அல்ல, விதைகள். ஒன்று விதைத்தால் ஓராயிரம், ஈராயிரமாக வெடித்து முளைத்து வரும்” என்று அவர் உவமை கூறினார். நாம் தமிழர் கட்சி, இந்திய கட்சிகள் அல்லது திராவிட கட்சிகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று இறைவன் இயேசு மேல் ஆணையிட்டு உறுதியளித்தார்.
“இப்போதும், எப்போதும் தனித்து நிற்கிறோம். வெற்றி-தோல்வி இரண்டும் ஒன்றுதான்” என்று அவர் சொன்னார்.சீமானின் இந்தப் பேச்சு, விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கிறது. “திரைக்கவர்ச்சியை மட்டும் வைத்து முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்படுவது தகுதி இல்லை” என்று அவர் சாடினார். நாம் தமிழர் கட்சி, கருத்தியல் புரட்சியின் படை – சீருடை அணியாத, ஆயுதம் ஏந்தாத தமிழ் தேசிய விடுதலைக்கான மக்கள் ராணுவம் என்று விவரித்தார்.
“பாஜக தனியா நிற்கட்டும், நானும் தனியா நிற்கிறேன். என்னை விட ஒரு ஓட்டு கூட வாங்கி காட்டுங்கள்” என்று சவால் விடுத்தார்.சீமானின் பேச்சு, தமிழக அரசியலில் தனித்துவமான நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது. விஜய்யின் கூட்டணி ஊகங்களுக்கு மத்தியில், நாம் தமிழர் கட்சியின் தனி போராட்டம் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். இது, 2026 தேர்தலுக்கு முன் கட்சிகளிடையேயான போட்டியை சூடாக்கியுள்ளது.
