மாநில கல்விக் கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில் மாநில கல்விக் கொள்கை புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

MK Stalin CM

சென்னை :தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8, 2025) வெளியிடுகிறார். மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில், இந்த மாநில கல்விக் கொள்கை புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது..

இதற்காக, கடந்த 2022-ல் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட 14 பேர் கொண்ட குழு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் ஆலோசனை நடத்தி, 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2024 ஜூலை மாதம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

அதன்படி,  3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என்றும், தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் எனவும் கொள்கை வரையறைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை தொடர்ந்து, முதற்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

முதலமைச்சர் இன்று இதை வெளியிடுவதன் மூலம், கல்வியில் சமூகநீதி மற்றும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கொள்கை தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாட்டின் தனித்துவமான தேவைகளைப் பிரதிபலிக்கிறது.