சென்னை : தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை 100% உறுதி செய்யும் நோக்கில், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' (Singappen Special Action Force) என்ற புதிய அதிநவீன பாதுகாப்புப் பிரிவைத் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தத் தனிப்படைக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக ரோந்து வாகனத்தை முதலமைச்சர் விஜய் தானே நேரில் இயக்கிப் பரிசோதித்ததோடு, இந்தச் சிறப்புப் படையின் அதிகாரப்பூர்வ இலச்சினையையும் (Logo) வெளியிட்டார். ஐ.ஜி கே. பவானீஸ்வரி அவர்களின் நேரடித் தலைமையில் இயங்கவுள்ள இத்தனிப்படை, மாவட்ட வாரியாக அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உடனடியாகக் களமிறங்கவுள்ளது.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் "அனைவருக்கும் என்னுடைய வணக்கம். ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டும்தான் நம்முடைய மனதுக்கு ரொம்ப நெருக்கமாவும், நினைச்சாலே சந்தோஷமாவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இந்தச் சிங்கப்பெண் சிறப்புப் படையைத் தொடங்கி வைக்கிற இந்த நிகழ்வு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது நம்ம பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் எல்லாருக்குமான பாதுகாப்பை உறுதி செய்வோம்னு சொன்னோம். அது வெறும் ஓட்டுக்காகவோ, எலெக்ஷனுக்காகவோ சொன்னது கிடையாது.
என் மனசுல இருந்து நிஜமா, உணர்வுபூர்வமா சொன்னது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள்ல நம்ம அரசுக்கு எப்போதுமே 'ஜீரோ டாலரன்ஸ்' (Zero Tolerance - சகிப்புத்தன்மையற்ற நிலை) தான். சொன்னதைச் செய்யணும், அதைச் செயலில் கொண்டு வரணும் என்பதில் உறுதியாக இருந்ததால் தான், மே 10-ல் ஆட்சிக்கு வந்த இந்த மிகக் குறுகிய நாட்களுக்குள்ளேயே இதை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கோம்.
பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கேட்கும்போது உண்மையிலேயே மனசு பதறுது, கண்ணு கலங்குது. இதையெல்லாம் மத்தவங்க மாதிரி ரீல்ஸிலும் (Reels), இன்ஸ்டாவிலும் (Instagram) தேடிட்டு இருக்க முடியாது. நாம் நிஜத்தை (Reality) புரிஞ்சுக்கணும்.
இந்த விவகாரத்தை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், பிரச்சனைகள் எல்லாம் சுத்தி சுத்தி ஒரே இடத்துல தான் வந்து நிக்குது. அதுதான் 'போதைப்பொருள் நடமாட்டம்'. இதை நாம் வேரோடு பிடுங்கி எறியணும். இந்த விவகாரம் நாம் ஆட்சிக்கு வந்த போன மாசம் முளைச்சது இல்லை. இது பல வருஷமா இருக்கிற பிரச்சனை.
பல வருஷமா இதைக் கண்டுக்காமல் விட்டதுனால தான் இதன் வேர் இவ்வளவு ஆழமாகப் பரவியிருக்கு. இதை இவ்வளவு நாளா கண்டுக்காமல் விட்டது யார் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இப்போது அதைப் பேசி பிரயோஜனம் இல்லை. போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான கொடுமை, சட்டம்-ஒழுங்கு இந்த மூணும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை (Interlinked). இதை எப்படி நாம் சரி செய்யப்போகிறோம் என்பதுதான் நம் முன்னால் இருக்கும் சவால்.
பெண்களைத் தொந்தரவு செஞ்சிட்டு அப்படியே எஸ்கேப் ஆகிப் போயிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு நான் ஒரு எச்சரிக்கையாகவே இதைச் சொல்கிறேன். பெண்கள் பாதுகாப்பைக் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதைச் சகித்துக்கொள்ள முடியாது.
காவல்துறை மூலமாக அவங்களுக்கான தண்டனைகளும், நடவடிக்கைகளும் மிகக் கடுமையானதாக இருக்கும். மிக வேகமானதாக (Fast-track) சார்ஜ் ஷீட் (Charge sheet) தாக்கல் செய்யப்படும். அதே நேரத்தில், அந்த வேகத்தில் எந்தவொரு நிரபராதியும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் காவல் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும். தப்பு செய்தவனுக்கு மட்டுமே நீதிமன்றம் மூலமாக உண்மையான கடுமையான தண்டனை வாங்கித் தரணும். அதைப் பார்த்துவிட்டு, அடுத்த முறை தப்பு செய்ய நினைப்பவனுக்குக் கூட பயம் வரணும் எனவும் விஜய் தெரிவித்தார்.
என்னைப்பொறுத்தவரை ஒரு அரசாங்கத்தோட முழுமையான வெற்றி என்பது வெறும் உள்கட்டமைப்பு வளர்ச்சியிலோ அல்லது பொருளாதார வளர்ச்சியிலோ மட்டுமே இல்லை. அந்த மாநிலத்தில் இருக்கிற பெண்களும், குழந்தைகளும் எவ்வளவு மரியாதையோடும், பயமில்லாமலும் வாழ்கிறார்கள் என்பதில்தான் அந்த அரசின் முழு வெற்றியே அடங்கியிருக்கிறது. அதோடு சேர்ந்ததுதான் மற்ற எல்லா வளர்ச்சியும். தவெக அரசு அதில் முழுமையாகக் கவனம் செலுத்தும். கான்ஃபிடென்ட்டா இருங்க, நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்"என பேசினார்.
மேலும், தமிழக அரசின் பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ படைக்கு முதல்கட்டமாக ரூ.354 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் அதிநவீன வாகனங்கள், நவீன கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், இரண்டாம் கட்டத்தில் இந்தப் படைக்காக மட்டும் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக குற்றங்களைத் தடுக்க ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதும் இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். பேருந்து நிலையங்கள், பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்தப் படை தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளது.
