சென்னைக்கு அருகே டிட்வா புயல்....வானிலை மையம் முக்கிய தகவல்!

வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் தற்போது சென்னைக்கு தெற்கே 540 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ditwah cyclone news

சென்னை :தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா (Ditwah) புயல் இப்போது வலுவான புயலாக மாறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இன்று மாலை 6 மணி நிலவரப்படி, புயலின் மையம் சென்னைக்கு தெற்கே 540 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இலங்கையின் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 220 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

புயல் தற்போது மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து, நாளை (நவம்பர் 29) இரவு அல்லது நவம்பர் 30 அதிகாலையில் வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் மிகக் கனமழை தொடங்கும். காற்றின் வேகம் மணிக்கு 80-90 கி.மீ. வரை எட்டலாம். மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை, பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு எச்சரித்துள்ளது.

இன்று 28-11-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.