முற்றிலுமாக வலுவிழந்தது ஆட்டம் காட்டி வந்த டிட்வா புயல்...வானிலை மையம் தகவல்!

நவ.25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவ.27ம் தேதி புயலாகவும் உருவான டிட்வா முற்றிலுமாக வலுவிழந்தது.

Cyclone Ditwah update

சென்னை :வங்கக் கடலில் நவம்பர் 25 அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவான டிட்வா புயல், நவம்பர் 27 அன்று புயலாக வலுவடைந்து கரையைக் கடந்தது. இன்று முற்றிலும் வலுவிழந்து, வட தமிழ்நாட்டில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும், சென்னை உள்பட வட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 9 வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும். திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் ஒரு இரண்டு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் , டிட்வா புயலின் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு (Deep Depression) காரணமாக டிசம்பர் 1 முதல் சென்னையில் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 1 முதல் 4 வரை மூன்று நாட்களாக தொடர்ந்து நீடித்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. மழைநீர் தேங்கியதால் சாலைகள் மூழ்கி, போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கடும் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அரசு, மழை பாதிப்புகளை சரி செய்ய NDRF மற்றும் SDRF குழுக்களை தயாராக வைத்திருக்கிறது. மின்சாரம் துண்டிப்பை சரி செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் வீடுகளில் தங்கி, ஐஎம்டி சேதங்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை தொடர்வதால், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.