முகத்தை மூடினாரா எடப்பாடி? அதிமுக ஐடி விங் கொடுத்த விளக்கம்!

எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சரை சந்திக்கச் சென்றார் என்பது நாடறியும். சந்திப்பு முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவசியம் அவருக்கில்லை என அதிமுக IT Wing விளக்கம் அளித்துள்ளது.

edappadi palanisamy SAD

சென்னை :அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செப்டம்பர் 16, 2025 அன்று டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பில், அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். தம்பிடுரை, இன்பதுரை ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்பின் முக்கிய நோக்கமாக, பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரி கடிதம் அளித்ததாக இபிஎஸ் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த சந்திப்பு முடிந்து இபிஎஸ் வெளியே வந்தபோது, அவர் முகத்தை கைக்குட்டையால் மூடியபடி காரில் சென்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக வெடித்தது. சிலர், இது இபிஎஸ்ஸின் தர்மசங்கடமான நிலையை காட்டுவதாகவும், பாஜகவுடனான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட அழுத்தத்தை பிரதிபலிப்பதாகவும் கடுமையாக விமர்சித்தனர்.

உதாரணமாக, இந்த விவகாரத்தில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், இபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தார். “இபிஎஸ் தன்மானம் பற்றி பேசுகிறார், ஆனால் டெல்லி சென்று அமித் ஷாவை திருட்டுத்தனமாக சந்தித்துவிட்டு, முகத்தை மூடிக்கொண்டு திரும்புகிறார். இது அதிமுகவின் சுதந்திரத்தை இழக்கச் செய்யும் செயல்,” என்று தினகரன் குற்றம்சாட்டினார்.

இந்த விமர்சனங்கள், இபிஎஸ்ஸின் பாஜக சார்பு நிலைப்பாடு குறித்து சர்ச்சையை தூண்டி, அதிமுகவின் உள் ஒற்றுமையை மேலும் கேள்விக்குள்ளாக்கியது. இந்த விவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில், அதிமுக IT Wing X தளத்தில் விளக்கம் அளித்தது. “இபிஎஸ் அமித் ஷாவை சந்தித்தது அனைவரும் அறிந்த விஷயம். முகத்தை மூடிக்கொண்டு சென்றதாக எதிர்க்கட்சிகள் பரப்பும் கதை, முகத்தை துடைத்ததை தவறாக சித்தரிக்கும் பொய்யான கதை (Fake Narrative) ஆகும். ஆட்சிக்கு வந்த பின் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத திமுகதான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்,” என்று அதிமுக IT Wing கூறியது.