திமுக அரசின் சாதனை எதிர்க்கட்சிகளை உறுத்துகிறது! இபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

விடுபட்ட மகளிருக்கு ஓரிரு மாதங்களில் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை கொடுக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy udhayanidhi stalin

சென்னை :மாவட்டத்தில் நடைபெற்ற பெரிய அளவிலான திருமண நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. இதில், ஏழை மற்றும் எளிய மக்களின் திருமணங்கள் எளிமையாகவும், சமத்துவத்துடனும் நடத்தப்பட்டன. உதயநிதி, தி.மு.க. அரசின் மகளிர் மேம்பாட்டு திட்டங்களையும், சமூகநீதி முயற்சிகளையும் பாராட்டி, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

உதயநிதி தனது உரையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மாபெரும் வெற்றியை விவரித்தார். இத்திட்டம், தமிழகத்தில் 1.15 கோடிக்கும் மேற்பட்ட மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கி, அவர்களின் பொருளாதார தன்னிறைவை உறுதி செய்கிறது. “உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 40% மனுக்கள் இத்திட்டத்திற்காகவே வந்துள்ளன. விடுபட்ட மகளிருக்கு ஓரிரு மாதங்களில் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும்,” என்று அவர் உறுதியளித்தார்.

மேல்முறையீடு செய்த 9 லட்சம் மகளிர் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இது தமிழக மகளிரின் சுயமரியாதையையும், வேலைவாய்ப்பு விகிதத்தையும் (43%) உயர்த்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தி.மு.க. அரசின் மற்றொரு சாதனையாக, விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 730 கோடி இலவச பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளதாக உதயநிதி குறிப்பிட்டார்.

இந்தத் திட்டங்கள், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 11.19% ஆக உயர்த்தியுள்ளன, இது இந்தியாவின் 6.5% வளர்ச்சியை விட இரு மடங்கு அதிகம். “திராவிட மாடல் அரசு, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, சமூகநீதியை உறுதி செய்கிறது,” என்று கூறி, அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினார்.

மேலும், இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் திராவிட இயக்கத்தின் பங்களிப்பால் சாத்தியமானவை என்று பாராட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு உதயநிதி கடுமையான பதிலடி கொடுத்தார். இபிஎஸ், கலைஞர் கல்லூரியை தொடங்க அறநிலையத்துறை நிதியைப் பயன்படுத்தியதை விமர்சித்து, அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், “அறநிலையத்துறை நிதி மக்களுக்கே சொந்தம். இதைப் பயன்படுத்தி ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவது தவறல்ல. உச்சநீதிமன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்து, அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது,” என்று உதயநிதி தெரிவித்தார். “இந்தத் திருமணங்கள், ஏழை மக்களுக்கு எளிமையாகவும், சமத்துவத்துடனும் நடத்தப்படுகின்றன. முந்தைய அதிமுக அரசு இத்தகைய திட்டங்களை நிறுத்தியது, ஆனால் தி.மு.க. அரசு மீண்டும் இவற்றை தொடங்கியுள்ளது,” என்று அவர் விளக்கினார்.  “திராவிட மாடல் அரசின் சாதனைகள், எதிர்க்கட்சியினரின் கண்களை உறுத்துகிறது. ஆனால், மக்கள் இந்த முன்னேற்றங்களைப் புரிந்து, அரசை ஆதரிக்கின்றனர்,” என்றும் உதயநிதி தெரிவித்தார்.