போராட்டம் வேண்டாம்... கடந்து செல்லுங்கள் - விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தல்!

விசிகவை விமர்சித்த ஆ.ராசாவைக் கண்டித்து போராட வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகள் தற்போது திமுக - விசிக தொண்டர்கள் மத்தியில் நேரடி மோதலாக வெடித்துள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களே இந்த பரபரப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் வெளிநின்று ஆதரவு தெரிவித்ததால், விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை உறுதி செய்தது.

தேர்தலுக்கு முன்பே “ஆட்சி அமைந்தால் கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும்” என்று விஜய் அறிவித்திருந்த நிலையில், அதன் அடிப்படையில் விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. இந்த முடிவுதான் தற்போது திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, விசிக மற்றும் முஸ்லிம் லீக் குறித்து விமர்சனமாக கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஏற்கனவே சமூக வலைதளங்களில் திமுக மற்றும் விசிக ஆதரவாளர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில், அந்த மோதல் தற்போது நேரடி மோதலாக மாறியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்போது அங்கு காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் இருந்ததால், சம்பவம் பெரிதாகாமல் தடுக்கப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக 120 பேர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து முதலில் அமைதியாக இருந்த விசிக தலைவர் திருமாவளவன், பின்னர் வெளியிட்ட காணொளி மூலம் தனது நிலைப்பாட்டை விளக்கினார். அதில், “ஆ.ராசா போன்றோர் நம்மை கடுமையாக விமர்சித்தார்கள். அவர்கள் ஆதங்கப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது” என்று கூறினார்.

மேலும், “திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த தவெகவுடன் நாம் இணைந்திருப்பதை திமுக தொண்டர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் விமர்சிப்பார்கள் என்பதை நாங்கள் எதிர்பார்த்தே இருந்தோம்” என்றும் தெரிவித்தார்.

“விசிகவும் நானும் எவ்வளவு நேர்மையாக இருந்தோம் என்பது அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு நன்றாக தெரியும். இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம்” என்று தனது கட்சித் தொண்டர்களிடம் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

ஆ.ராசாவை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “திமுகவினரின் விமர்சனங்கள் எனக்கு வலியைத் தந்தாலும், அரசியல் சூழ்நிலை காரணமாகவே இந்த முடிவை எடுத்தோம்” என்றும் அவர் கூறினார்.

மேலும், “ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படக்கூடாது, உடனடியாக மறுதேர்தல் வரக்கூடாது என்பதற்காகத்தான் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். அந்த முடிவால் வரும் விமர்சனங்களை நாங்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

அதேபோல், “தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக - பாஜக கூட்டணி வீழ்த்தப்பட்டுவிட்டது என்பது முக்கியமான அரசியல் மாற்றம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனுடன், கரூரில் நடந்த சம்பவம் குறித்து பேசிய அவர், “அது எனக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அது ஒரு விபத்துதான் என்று ஆதவ் அர்ஜுனாவிடம் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தேன்” என்றும் கூறியுள்ளார்.