செங்கல்பட்டு :மாவட்டத்தில் இன்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) குறித்து கிண்டலான தொனியில் பேசினார். இது குறித்து பேசிய அவர் “ஈபிஎஸ் 100 ஆண்டுகள் மன நலத்துடன் வாழ வேண்டும். அதிமுகவை வழிநடத்த அவருக்கு மட்டுமே தகுதி உள்ளது. அவர்தான் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும். இது தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்கள் செய்யும் ஒரே நல்ல காரியமாக இருக்கும். இதனால் எங்களுடைய வேலையும் எளிதாக இருக்கும்,” என்று உதயநிதி கூறினார்.
ஈபிஎஸ்ஸின் சமீபத்திய சுற்றுப்பயணங்களை விமர்சித்த உதயநிதி, “அவருடைய முதல் சுற்றுப்பயணத்தில் பாதி கூட்டணி கட்சிகள் காணாமல் போய்விட்டன. இப்போது இரண்டாவது சுற்றுப்பயணத்திற்கு சென்றிருக்கிறார். திரும்பி வரும்போது, அவர் தனியாக பேருந்தில் வந்தாலும் வருவார். டிரைவர் கூட இருப்பாரா என்று தெரியவில்லை,” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
மேலும், ஈபிஎஸ்ஸின் சுற்றுப்பயணத்தின் போது நடந்த ஆம்புலன்ஸ் விவகாரம் குறித்து உதயநிதி விமர்சித்தார். “ஆம்புலன்ஸுக்கு வழிவிடுபவரே உண்மையான தலைவர். ஆனால், இப்படிப்பட்ட சம்பவங்கள் ஈபிஎஸ்ஸின் தலைமையை கேள்விக்குள்ளாக்குகின்றன,” என்று அவர் கூறினார். இந்தச் சம்பவம், திமுக-அதிமுக இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.உதயநிதியின் இந்தப் பேச்சு, அதிமுகவின் உட்கட்சி பிரச்னைகளையும், கூட்டணி நிலைமைகளையும் கிண்டல் செய்யும் வகையில் அமைந்தது. “அதிமுகவினர் இதை ஒப்புக்கொள்வார்களா என்று தெரியவில்லை, ஆனால் நான் முன்மொழிகிறேன் – ஈபிஎஸ்ஸே நிரந்தர பொதுச்செயலாளர்,” என்றும் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி, நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடியால் மட்டும்தான் இருக்க முடியும். அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடி செய்யக்கூடிய நல்லகாரியமும் அதுதான். எங்களுக்கும் வேலை கொஞ்சம் சுலபமாக இருக்கும்” என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
