ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி!

விஜய்யால் முடிந்தால் ஒரு ப்ரஸ் மீட் வைத்து உங்கள மாதிரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லுங்க என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy admk

சென்னை :அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்தார். இதில் மிக முக்கியமானதாக கல்விக் கடன் தள்ளுபடி திட்டம் இடம்பெற்றுள்ளது. வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்து, அந்தத் தொகையை முழுவதுமாக அரசே ஏற்கும் என்று அவர் அறிவித்தார். இத்திட்டம் மாணவர்களின் குடும்பங்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளில் முதியோருக்கான ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் எடப்பாடி அறிவித்தார். தற்போது ரூ.1,000-ஆக உள்ள ஓய்வூதியத் தொகையை இரட்டிப்பாக்குவது மூத்த குடிமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதேபோல், ஜல்லிக்கட்டு வீரர்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது வாழ்வாதார உதவியாக அமையும் என்றும், ஏழை எளிய மக்களின் சமையல் செலவு கணிசமாகக் குறையும் என்றும் அவர் தெரிவித்தார். இத்திட்டம் பெண்களின் சுமையைக் குறைக்கும் முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது.விஜய் மீது எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். “விஜய்க்கு தமிழ்நாட்டில் என்ன அரசியல் நடக்கிறது என்பதே தெரியவில்லை.

பொதுவெளியில் வந்து பார்த்தால்தானே தெரியும். மக்களை பார்ப்பதில்லை, தொலைக்காட்சியை பார்த்தும் தெரிந்து கொள்வதில்லை” என்று அவர் குறிப்பிட்டார். கரூர் நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், 72 நாட்கள் கழித்தே வெளியே வந்த விஜய் குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி, அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும், நடித்து பார்க்கிறார் என்றும் விமர்சித்தார்.

ஒட்டுமொத்தமாக, அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகள் கல்வி, வயதானோர் நலன், பெண்கள் நலன், ஜல்லிக்கட்டு வீரர்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளன. எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புகள் 2026 தேர்தல் களத்தில் திமுக – தவெக அணிகளுக்கு எதிரான அதிமுகவின் உத்தியை வலுப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. விஜய் மீதான அவரது தொடர் விமர்சனங்கள் தேர்தல் களத்தில் புதிய சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.