சென்னை :தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் (அக்டோபர் 15, 2025) விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை மையமாகக் கொண்டு அரசை கடுமையாக விமர்சித்தார். “தவெக தலைவர் விஜய்யின் முந்தைய 4 மாவட்ட சந்திப்புகளில் ஆயிரக்கணக்கானோர் கூடியதை உளவுத்துறை அறிந்திருந்தால், ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை? அதிமுகவுக்கு மறுக்கப்பட்ட வேலுச்சாமிபுர இடத்தில் தவெகவுக்கு அனுமதி கொடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உரிய பாதுகாப்பு இல்லாததால் 41 உயிரிழப்புகள் ஏற்பட்டன” என்று அவர் குற்றம்சாட்டினார்.
அது மட்டுமின்றி, இந்திய அரசியல் வரலாற்றில் இத்தகைய சம்பவம் இல்லை என்றும், அரசின் பொறுப்பின்மைக்கு கணக்கு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, வெளிநடப்பு செய்தார். இந்த விமர்சனங்களுக்கு பதிலடியாக, செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ர.கே. ரகுபதி, “இன்று சட்டமன்றத்தில் முழுக்க முழுக்க பொய்யாகவே பேசியிருக்கிறார் பொய்பாடி பழனிசாமி” என்று கடுமையாக சாடினார்.
கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என இபிஎஸ் கனவு காண்கிறார் என்று விமர்சித்த ரகுபதி, “இரவோடு இரவாக அரசு எடுத்த துரித நடவடிக்கையால்தான் பல பொதுமக்கள் உயிர் தப்பினர். எதிலாவது குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று தேடி, அதில் அரசியல் செய்யலாம் என்கிறார்” என்று கூறினார். அரசின் மீது குறை கூற முடியாமல் தோல்வி முகத்துடன் இபிஎஸ் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்ததாக ரகுபதி சாடினார்.
“நடிகர் விஜய்யை வேடிக்கை பார்க்க மக்கள் கரூரில் கூடினர். வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத வகையில் தவெக பிரச்சாரத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது” என்று அவர் தெரிவித்தார். கரூர் துயர சம்பவத்தில் ஈபிஎஸ் பொய் மட்டுமே பேசி வருகிறார் என்றும், அரசின் விரைந்த செயல்பாட்டால் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் வலியுறுத்தினார்.”எத்தனை கூட்டணிகள் சேர்ந்தாலும், முதல்வர் ஸ்டாலினின் சாதனைகளால் திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்” என்று ரகுபதி உறுதியளித்தார். அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மக்களின் ஆதரவைப் பெறும் என்பதால், எதிர்க்கட்சியின் விமர்சனங்கள் தோல்வியடையும் என்று அவர் முடிவுரைத்தார்.
