சேலம் :காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி முதல் 25,000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் எந்நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50,000 கனஅடி முதல் 70,000 கனஅடி வரை உபரிநீர் 16 கண் மதகு வழியாக திறக்கப்படலாம் என்பதால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடி வரை உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆற்றில் இறங்குவது, மீன்பிடிப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள் திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளன. மக்கள் விழிப்புடன் இருக்கவும், உடமைகளை பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
