சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,“ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம் உண்டு.
அந்த இலக்கணத்தை மீறி, மனித சமுதாயத்துக்கே புறம்பான, மிகக் கேவலமான பேச்சை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பேசி வருகிறார். நேற்று அவருடைய வயிற்றெரிச்சலின் உச்சகட்டமாக, எங்களுடைய உயிரினும் மேலான அன்புத் தலைவர், இரண்டு கோடி தொண்டர்களின் உயிராக மதிக்கப்படும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மிகக் கீழ்த்தரமாக, தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்.
ஒரு பெண்ணைப் பேசும்போது, அதிலும் தமிழ்நாட்டுப் பெண்களின் பிரதிநிதியாக டெல்லியில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் எங்கள் துணைப் பொதுச் செயலாளரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது என்பது, தமிழ்நாட்டுப் பெண்கள் அத்தனை பேரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்வதற்கு சமம். இது தனிமனித தாக்குதல் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான தாக்குதல்.
அதிமுகவினர் தொடர்ச்சியாகப் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை ஒரு செயல் திட்டமாகவே வைத்திருக்கிறார்கள். இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். எனவே இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம். மேலும், இந்த அவதூறு குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்.இது எதிர்வினை அல்ல. செல்லும் இடமெல்லாம் எங்கள் துணை முதலமைச்சரை ‘பாட்டாளி’ என்று அழைத்து, தரம் தாழ்ந்து பேசுகிறார்.
‘Give respect, take respect’ என்பது தான் விதி. நாம் என்ன சொல்கிறோமோ அதுதான் நமக்குத் திரும்பக் கிடைக்கும்.ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம், பெண்களுக்கு என்ன செய்யப் போகிறோம், கல்வி, தொழில், விவசாயம் என்ன செய்யப் போகிறோம் என்று பேச வேண்டும்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதற்கான பதில் இல்லை. அவரிடம் இருப்பது பொள்ளாச்சி பாலியல் வழக்கு, துப்பாக்கிச் சூடு, இரண்டு அப்பாவி பையன்களின் மரணம், ஸ்டெர்லைட் போன்றவை மட்டுமே.எனவே இப்படிப்பட்ட மூன்றாம் தர பேச்சாளருக்கு ‘முன்னாள் முதல்வர்’ என்ற பொறுப்பு இல்லை. அவர் அந்தப் பொறுப்பை இழந்துவிட்டார்” என்று தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.இந்தக் கண்டனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.
