சென்னை :நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (01-12-2025) காலை 0830 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை -தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அப்பொழுது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது.
கடலோரப்பகுதிகளுக்கு இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் – புதுவை மற்றும் தெற்கு ஆந்திர களுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.
சென்னையில் பல இடங்களில் விடாமல் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. ஏற்கனவே, சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை கொடுத்திருந்தது. தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது என்கிற காரணத்தால் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
