குதிரை பேர வழக்கு : செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் மனுக்கள் தள்ளுபடி செய்த ஐகோர்ட்!

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Hero Image

ஊத்தங்கரை தொகுதி த.வெக. எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரைப் பேரம் நடத்திய விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இருவரும் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் பெற்றனர்.

அப்போது, குறிப்பிட்ட காலத்திற்குத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், அந்த நிபந்தனையின்படி அவர்கள் இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களை வேறு வழக்குகளிலும் கைது செய்யக்கூடும் என்ற அச்சம் இருப்பதாகத் தெரிவித்து, "விசாரணை என்ற பெயரில் எங்களைத் துன்புறுத்தக் கூடாது; விசாரணைக்கு அழைக்க வேண்டுமெனில் முறையாகச் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்று கோரி செந்தில் பாலாஜியும் அசோக் குமாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, இருவரின் மனுக்களையும் திட்டவட்டமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

விசாரணையின் போது கருத்துத் தெரிவித்த நீதிபதி, "முன்ஜாமீன் வழங்கப்பட்ட பிறகு இதுவரை யாரும் முறையாகச் சரணடையவில்லை. நீதிமன்ற விதிகளைப் பின்பற்றாமல் சரணடையாத பட்சத்தில், எங்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கோருவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், முன்ஜாமீன் பெற்றுவிட்டு இதுவரை சரணடையாத காரணத்தினால், இத்தகைய கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது.

குதிரை பேர வழக்கு : செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் மனுக்கள் தள்ளுபடி செய்த ஐகோர்ட்!