SIR நீக்கப்பட்டவர்கள் விண்ணப்பிப்பது எப்படி? விளக்கம் கொடுத்த அர்ச்சனா பட்நாயக்!

எஸ்.ஐ.ஆரில், இறந்தவர்களின் எண்ணிக்கை 26,94,672, இடம் பெயர்ந்தவர்கள் 66,44,881 என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

archana patnaik

சென்னை :தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) நவம்பர் 4, 2025 அன்று தொடங்கப்பட்டு, டிசம்பர் 14, 2025 அன்று முடிவடைந்துள்ளன. இந்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நடைபெற்றன. இதன் முக்கிய நோக்கம், வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கி, தவறான, காலாவதியான அல்லது இல்லாத வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதாகும்.

இந்தப் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, இன்று (டிசம்பர் 19, 2025) மாவட்டங்கள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விவரங்களைத் தெரிவித்தார்.அவர் கூறிய முக்கியத் தகவல்கள்: அக்டோபர் 27, 2025 வரை தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடி 41 லட்சம் 14,587 ஆக இருந்தது.

SIR திருத்தப் பணிக்குப் பிறகு, இன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடி 43 லட்சம் 76,755 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதனால், மொத்தம் 97 லட்சம் 37 ஆயிரத்து 831 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.நீக்கப்பட்ட பெயர்களின் விவரங்கள்: இறந்த வாக்காளர்கள் 26 லட்சம் 94 ஆயிரத்து 672 பேர், குடிபெயர்ந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்கள் 66 லட்சம் 44 ஆயிரத்து 881 பேர், இரட்டைப் பதிவு செய்தவர்கள் 3 லட்சம் 39 ஆயிரத்து 278 பேர்.

வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் வகைவாரியான எண்ணிக்கை: ஆண் வாக்காளர்கள் 2 கோடி 66 லட்சம் 63,233 பேர், பெண் வாக்காளர்கள் 2 கோடி 77 லட்சம் 6,332 பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,191 பேர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4 லட்சம் 19 ஆயிரத்து 355 பேர்.இந்த வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது தவறான நீக்கம் ஏற்பட்டவர்கள், பூத் லெவல் அதிகாரி (BLO), இலாகா தேர்தல் அதிகாரி (ERO), வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக படிவம் 6 மூலம் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

மேலும், வரும் இரண்டு வார இறுதி நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம்களில் நேரடியாக விண்ணப்பித்து பெயரைச் சேர்க்கலாம்.ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய ஜனவரி 18, 2026 வரை கால அவகாசம் உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 14 அன்று வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.