அதிமுக பிளவுபட கூடாதென்று 2 முறை வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் -செங்கோட்டையன் பேச்சு!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கான பரிந்துரைக் கடிதத்தை எல்லோரிடமும் ஒப்புதல் பெற்றவன் நான் என செங்கோட்டையன் பேசியுள்ளார்.

Sengottaiyan admk

ஈரோடு :அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சி வலிமையோடு இருக்க அயராமல் பணியாற்றியிருக்கிறேன்” என்று தொடங்கிய அவர், 1975-ல் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று, அதைச் சிறப்பாக நடத்தியதற்காக எம்ஜிஆரிடம் பாராட்டு பெற்றதாகவும், ஜெயலலிதா தன்னை ‘விசுவாசமுள்ள தொண்டன்’ என்று அழைத்ததாகவும் நினைவுகூர்ந்தார்.

மேலும், கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக இரு முறை தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா தன்னிடம் பேசி கட்சியை வழிநடத்த உதவி கேட்டதாகவும், அதன்படி எடப்பாடி கே. பழனிச்சாமியை பொதுச்செயலாளராக பரிந்துரைத்ததாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆனால், பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு பழனிச்சாமியின் முடிவுகளே காரணம் என்று சுட்டிக்காட்டினார்.  “அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது” என்று அவர் வலியுறுத்தினார்.தொடர் தோல்விகளால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், கடந்த 5-ம் தேதி மனம் திறந்து பேசியதாகவும் கூறினார்.

“வெறியேறியவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்” என்று 6 பேர் கருத்து தெரிவித்ததாகவும், அதற்காக 10 நாள் காலக்கெடு வைத்து, யாரை சேர்க்க வேண்டும் என்பதை பொதுச்செயலாளர் முடிவெடுக்கலாம் என்று கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால், பழனிச்சாமி இந்தக் கருத்தை ஏற்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். கட்சி ஒற்றுமைக்கான தனது முயற்சிகள் புறக்கணிக்கப்பட்டதால், தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக வைத்ததாகவும் கூறினார்.

செங்கோட்டையன், கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும், அதற்காகவே பிரிந்த தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலாவை சந்தித்ததாகவும் தெரிவித்தார். ஆனால், இந்தச் சந்திப்பு கட்சி விரோதமாகக் கருதப்பட்டு, தன்னை நீக்கியதாகவும் அவர் விமர்சித்தார். “அதிமுகவுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன்” என்று மீண்டும் வலியுறுத்திய அவர், கட்சியின் எதிர்காலத்திற்காகவே இந்த முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறினார்.