CM சார் பழிவாங்க எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் – விஜய்!

5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என த.வெ.க தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

tvk vijay and cm

கரூர் :தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியாகினர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தவெக கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் உள்ளிட்ட 4 பேர் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டு, 25 சமூக வலைதள கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில், தவெக தலைவர் விஜய் முதல் முறையாக வீடியோ மூலம் தனது மனவேதனையைப் பகிர்ந்தார். “என் வாழ்நாளில் இப்படி ஒரு கடினமான சூழ்நிலையை சந்தித்ததில்லை. மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தால் அதிக அளவில் வந்துவிட்டனர். அவர்களின் அன்புக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். மனது வலியால் நிறைந்துள்ளது. 5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தேன், ஆனால் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது?” என்று உருக்கமாகக் கூறினார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர் “மக்கள் உண்மையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாமே தெரியும். சீக்கிரம் உண்மைகள் வெளிவரும்,” என்று அவர் உறுதியளித்தார்.விஜய் மேலும், “சி.எம். சார், பழிவாங்க வேண்டுமா? என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் தொண்டர்களை விடுங்கள். தவெகவினர் மற்றும் சமூக வலைதளங்களில் எனக்காக பேசுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் மீது கை வைக்காதீர்கள் நான் வீட்டிலோ, அலுவலகத்திலோதான் இருப்பேன்,” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார். “மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்பதால் கரூருக்கு இப்போது செல்லவில்லை. கூடிய விரைவில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பேன்,” என்று கூறி விமர்சனங்களுக்கு விஜய் விளக்கமும் அளித்தார்.

unknown node