சென்னை : அதிமுகவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த உள்கட்சி குழப்பம் தற்போது வெளிப்படையான அரசியல் பரபரப்பாக மாறியுள்ளது. அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென பதவி விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த மூவரும் இதுவரை அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவாக இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மூவரும் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அதன் பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு என்ற கீழ்த்தர அரசியலை தமிழக வெற்றிக் கழகம் செய்து வருகிறது. குதிரை பேர அரசியலை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது,” என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து பல்வேறு அரசியல் தரப்பிலிருந்தும் எதிர்வினைகள் வெளியாகின. குறிப்பாக, த.வெ.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்தே எதிர்ப்பு குரல் எழுந்தது. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளியிட்ட கருத்தில், “ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் எந்த குதிரை பேர அரசியலையும் காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது” என்று தெரிவித்துள்ளார்.
குதிரைபேரம் குற்றச்சாட்டு
அவர் மேலும் கூறுகையில், “தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் விஜய் தலைமையிலான அரசுக்கு துணை நிற்போம். ஆனால் அதற்காக அனைத்து வழிமுறைகளையும் ஏற்க முடியாது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயல்பாடுகளே இருக்க வேண்டும். மக்கள் தீர்ப்பை மாற்றும் அரசியல் சரியானதல்ல,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக நாட்டின் பல மாநிலங்களில் பாஜக பயன்படுத்திய ஆயுதம் குதிரை பேர அரசியல். அதையே தமிழகத்தில் நாங்கள் ஆதரிக்க முடியாது,” என்றும் ஜோதிமணி கூறியுள்ளார்.
த.வெ.க சொல்வதென்ன?
இதற்கு பதிலடி கொடுத்த தமிழக வெற்றிக் கழக தரப்பு, “ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்கே வர வேண்டும் என்பது கூட தெரியாமல் பேசுவது வருத்தமளிக்கிறது,” என்று விமர்சித்தது.
மேலும், “பதவியை காப்பாற்றிக்கொள்ளாமல், நேரடியாக ராஜினாமா செய்து மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்க தயாராகவே இந்த மூவரும் வந்துள்ளனர். இது அரசியல் தார்மீகத்தின் எடுத்துக்காட்டு,” என்றும் தெரிவித்துள்ளது.
அதோடு, “கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இப்போது மக்கள் முன்னிலையில் மீண்டும் தீர்ப்பை சந்திக்கத் தயாராக சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர்,” எனவும் த.வெ.க தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள இந்த புதிய அதிர்ச்சி, கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தொடர்ந்து ஏற்பட்டுவரும் உள்கட்சி அதிருப்திகள் மேலும் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
