சென்னை :நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுகவின் கொள்கைகளை பின்பற்றுவதாக கடுமையாக விமர்சித்தார். சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “திமுக ஒரு சனியன், அதிமுக மற்றொரு சனியன். இந்த சனியன்களின் சட்டையை அணிந்து கொண்டு, சனிக்கிழமை சனிக்கிழமையாக புறப்பட்டு விடுகிறார் விஜய். இப்படி திமுக, அதிமுக கொள்கைகளை வைத்து அவர் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் விஜயை குறிப்பிட்டு இந்த விமர்சனத்தை அவர் முன்வைத்தார்.விஜயின் பிரச்சார உரைகள் மக்களின் உண்மையான பிரச்சினைகளை பிரதிபலிக்கவில்லை என்று சீமான் குற்றம் சாட்டினார்.
இது குறித்து பேசிய அவர் “விஜய் பயணம் மழை இடையூறு இல்லாமல் இருக்க வாழ்த்துகிறேன். அவருக்கு கட்சி, அவருக்கு விருப்பம், எப்படி வேண்டுமானாலும் கையாளட்டும். ஆனால், அவர்கள் என்ன பரப்புரை செய்கிறார்கள்? ‘சொன்னார்களே செய்தார்கள்’ என்று மட்டும் சொல்கிறார்கள். இது பரப்புரையா? மக்களின் மனதில் இருந்து பேச முடியவில்லை என்றால், எப்படி மக்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்? ஒவ்வொரு ஊரின் பிரச்சினைகளை கேட்டு, 4-5 நிமிடங்கள் எழுதி வைத்து பேசுகிறார்கள். இதற்கு வீட்டுப்பாடம் கூட செய்யவில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, உண்மையாக பேச வேண்டும் என்றும் விஜயை அவர் விமர்சித்தார். சீமான், தனது கட்சியின் அரசியல் அணுகுமுறையை பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டினார். “நாங்கள் உலக அரசியலை உள்ளங்கையில் வைத்திருக்கிறோம். எதையும் பார்த்து படிக்கும் கட்சி இல்லை. ஆப்பிரிக்காவில் புர்கினா பாசோ அதிபர் இப்ராஹிம் டிராரே என்னை ‘அந்த நாட்டு சீமான்’ என்று புகழ்கிறார். ஆனால், இங்கு என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்,” என்று அவர் மேலும், கூறினார்.
மேலும், தவெகவின் பிரச்சாரங்கள் மக்களின் உண்மையான தேவைகளை பிரதிபலிக்கவில்லை என்று குறிப்பிட்டார். திமுக மற்றும் அதிமுகவைப் போலவே, விஜயின் அணுகுமுறையும் பொதுவான வாக்குறுதிகளை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதாகவும், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆழமான மாற்றத்தை கொண்டுவர முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
