கரூர்:தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், தீவிர சிகிச்சையில் இருந்த கரூர் தொழிற்பேட்டை மெக்கானிக் கவின் (31) உயிரிழப்புடன், பலியானவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் 27 அன்று நடந்த இந்த சம்பவத்தில், 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தமிழக அரசு, ஓய்வூதிய நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது, இது சம்பவத்தின் காரணங்கள், போலீஸ் ஏற்பாடுகள், தவெக பொறுப்பு ஆகியவற்றை ஆராயும்.கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த் தலைமையில் 5 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை, விசாரணையை தொடங்கியுள்ளது.
போலீஸ், தவெக தரப்பு 10,000 பேர் என்று கூறியிருந்தாலும் 27,000-க்கும் மேற்பட்டோர் கூடியதால் நெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. விஜயின் வருகை தாமதம், வாகனத்தை தொடர்ந்து வந்த தொண்டர்கள், உணவு-தண்ணீர் இல்லாமை போன்ற காரணங்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது 4 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து த.வெ.க தரப்பு இந்த சம்பவத்தை ‘திட்டமிட்ட சதி’ என்று கூறி, மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. “கரூர் விஜய் பிரச்சாரத்தில் 40 பேர் உயிரிழந்தது எதேச்சையான விபத்து இல்லை. சிறப்பு அமர்வு அமைத்து விசாரிக்க வேண்டும்,” என்று கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து, “நாளை (செப்டம்பர் 29) மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். அதன் பிறகு நம் கருத்தை தெரிவிப்போம்,” என்று கூறினார்.
உயிரிழந்த குடும்பங்களை சந்திக்க விஜய் கரூர் வருவாரா என்ற கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. தவெக, போலீஸ் ஏற்பாடுகள், அரசு இடைஞ்சல் ஆகியவற்றை சதியாக சித்தரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார், பிரதமர் மோடி ரூ.2 லட்சம், விஜய் ரூ.20 லட்சம் உதவி அறிவித்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை அழைத்து சிகிச்சை ஏற்பாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
