விஜயின் மக்கள் செல்வாக்கு கேள்விக்குறியாகி இருக்கிறதா? ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

அண்ணா திமுக தொண்டர்களை கூவிக் கூவி அழைக்கிறீர்களா என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்த “90 சதவீத அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்ற கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசிய அவர், “அதிமுக தொண்டர்களை தொடர்ந்து கட்சியில் சேருமாறு அழைப்பது, த.வெ.க-வின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. விஜயின் மக்கள் செல்வாக்கு தற்போது கேள்விக்குறியாகி விட்டதா? அல்லது அந்த செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளவே அதிமுக தொண்டர்களை கூவி கூவி அழைக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி வழியில் வளர்ந்த விசுவாசமான அதிமுக தொண்டர்களை விலை பேச முயற்சிப்பது எந்த வகையிலும் நியாயமோ தர்மமோ அல்ல. அதிகார ஆசை காட்டி தொண்டர்களை பிரிக்க முயற்சிப்பது அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது” என்றும் விமர்சித்தார்.

அதிமுக என்பது அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல என்றும், எம்.ஜி.ஆர் உருவாக்கிய மக்கள் இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் உதயகுமார் குறிப்பிட்டார். “அதிமுகவை அழிக்க முயன்றவர்கள் கடந்த காலங்களில் தோல்வியடைந்துள்ளனர். இப்போதும் அதே நிலைதான் ஏற்படும். கட்சி மீது விசுவாசம் கொண்ட கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் பலவீனப்படுத்த முடியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற வாக்கு விகிதத்தை சுட்டிக்காட்டி, “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. மக்கள் ஆதரவை இழந்தது அதிமுக அல்ல. மாறாக, முழுமையான மக்கள் ஆதரவை பெறாத கட்சிதான் தற்போது மற்ற கட்சிகளின் தொண்டர்களை கவர முயற்சிக்கிறது” என குற்றம்சாட்டினார்.

இறுதியாக, “அதிமுக தொண்டர்களை கவரும் முயற்சியை த.வெ.க தொடர்ந்து மேற்கொண்டால் அரசியல் ரீதியாக கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும். வெற்றியும் தோல்வியும் அரசியலில் இயல்பானவை. ஆனால் அதிமுகவின் மக்கள் பணி ஒருபோதும் நிற்காது” என்று ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்