கரூர்:தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை (செப்டம்பர் 27) நடந்த இந்த நிகழ்வில், பல்லாயிரம் தொண்டர்கள் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டு, பலர் மூச்சுத்திணறி மயங்கினர். விஜய் பேசி முடித்து புறப்படும்போது சம்பவம் தெரிந்து, அவர் கார் உள்ளேயே கதறி அழுததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, தமிழக அரசு, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோரை பார்வையிட்டபின், “இந்த துயரச் சம்பவம் நெஞ்சை நொறுக்குகிறது. உடனடியாக விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த 50க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்று கூறினார்.
அதே சமயம் பலரும் சோகத்துடன் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் இரங்கலை தெரிவித்துள்ளார்கள். தவெக தலைவர்விஜய்தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர்ரஜினிகாந்த்தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்” எனவும் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
துணைமுதல்வர்உதயநிதி ஸ்டாலின்” கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் – ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தோர் – உடல்நலம் குன்றியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் கரூர் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில் அரசின் நடவடிக்கைக்கும் – மருத்துவக்குழுவுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்” எனவும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடிஎக்ஸ் வலைத்தள பக்கத்தில் “தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர்கமல்ஹாசன்“நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி” கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது . உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
