கரூர் :தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியாகினர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர், திருச்சி, மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரது யூடியூப் சேனலில், விஜய் கைது, மின்சார தடை சதி உள்ளிட்ட வதந்திகளை பரப்பியதாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. ஃபெலிக்ஸ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரிக்கப்படுகிறார்.
இதற்கு முன், இதே காரணத்திற்காக சரத்குமார், சகாயம் ஜேம்ஸ், சிவநேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சென்னை நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 25 சமூக வலைதள கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜே.கே., “வதந்திகள் பொதுமக்களிடையே குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரித்தார்.
இந்த வதந்திகள், சமூக அமைதியை குலைத்து, மக்களிடையே அச்சத்தை விதைத்ததாக கூறப்படுகிறது. மேலும், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில், தவெக கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 29 அன்று தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று பவுன்ராஜ் கைது செய்யப்பட்டார். கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் தவறியதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியம் காட்டியதாகவும் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
கூட்ட நெரிசலால் மரங்கள் முறிந்து, கடைகளின் தகரக் கொட்டகைகள் உடைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, மேலும் சந்தேக நபர்களை கண்காணித்து வருகிறது. அதே சமயம், மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, “காயமடைந்த 110 பேருக்கு 450 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது,” என்றார் என்பதும் குறிப்பிடதக்கது.
