பல முன்னாள் அமைச்சர்கள் த.வெ.க வரப்போகிறார்கள்... செங்கோட்டையன் பேச்சு!

"சட்டைப்பையில் எந்த தலைவரின் புகைப்படம் இருந்தாலும் விஜய் அரவணைப்பார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கு கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்குவதாக அறிவித்தார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகே இந்த அறிவிப்பு வெளியானது. இது செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அதிமுக அனுபவத்தை தவெகவுக்கு பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

செங்கோட்டையன் கோபி தொகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருப்பதால், இந்த இணைப்பு தவெகவின் கொங்கு மண்டல ஆதரவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவில் இணைந்த அன்றே செங்கோட்டையன் தனது சொந்த ஊரான கோபிசெட்டிப்பாளையத்துக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களும் ஆதரவாளர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழிநெடுகிலும் பூமாலைகள், வாழ்த்துகள், பட்டாசுகள் என்று கொண்டாட்டம் நிறைந்திருந்தது. செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களிடம் பேசியபோது, விஜய்யின் அரசியல் பயணத்தைப் புகழ்ந்து பேசினார்.“சட்டைப்பையில் எந்தத் தலைவரின் புகைப்படம் இருந்தாலும் விஜய் அரவணைப்பார். வரும் டிசம்பரில் தவெக கூட்டணி மேலும் வலுப்பெறும். நம்முடன் பல முன்னாள் அமைச்சர்கள் வரப்போகிறார்கள்” என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “மக்கள் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய் 2026-ல் தமிழக முதல்வராக அமர்வது உறுதி. தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியை உருவாக்க விஜய் புறப்பட்டிருக்கிறார். மக்களுக்கு புனித ஆட்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அந்த வழியில் நானும் இணைந்து பயணிக்கிறேன்” என்றார்.

செங்கோட்டையன் தொடர்ந்து பேசுகையில், “இரண்டு ஆட்சிகளையும் (திமுக, அதிமுக) மக்கள் தள்ளுபடி செய்ய விரும்புகிறார்கள். மாற்றத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நான் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். என் பின்னால் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானத்தை விலக்கி, மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார் விஜய். இது புனித ஆட்சிக்கான அவரது தீர்மானத்தை காட்டுகிறது” என்று உறுதியாகத் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.