சென்னை :தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுக – பாஜக கூட்டணி மேலும் வலுப்பெற்று வருகிறது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்தில் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு காலை உணவுடன் தொடங்கியது. அதன்பிறகு நாளை (ஜனவரி 22) மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டணி தொடர்பான மேல்நிலை விவாதங்கள், தொகுதி பங்கீடு, பிரசார உத்திகள், தேர்தல் தயாரிப்பு ஆகியவை குறித்து விரிவாகப் பேசப்பட்டது. இந்தக் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சந்திப்புக்குப் பிறகு இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
எடப்பாடி பழனிசாமி, “நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டமாக அமையும். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்” என்று கூறினார். பியூஷ் கோயல், “எடப்பாடி பழனிசாமி எனது நீண்ட கால நண்பர். தமிழகத்தில் NDA கூட்டணிக்கு ஈபிஎஸ் தலைமை தாங்குவார். NDA கூட்டணி தமிழகத்திற்கான சிறந்த எதிர்காலம்” என்று தெரிவித்தார்.
பியூஷ் கோயல் மேலும் கூறுகையில், “தி.மு.க. கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். மத்தியில் மோடி ஆட்சி, தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும்” என்று உறுதியாகக் கூறினார். உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அவர் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை கூறி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த சந்திப்பு மற்றும் அறிவிப்புகள் தமிழகத்தில் 2026 தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன. திமுகவுக்கு எதிராக அதிமுக – பாஜக கூட்டணி வலுவடைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. நாளை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் இக்கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக அமையும் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
