உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Rain - Orange Alert

சென்னை:தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதன்படி, நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.