சென்னை :அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கை, செங்கோட்டையன் கட்சியின் பிரிந்த தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோருடன் அக்டோபர் 30 அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சந்தித்து மரியாதை செலுத்தியதால் வந்தது.
செங்கோட்டையன், செப்டம்பர் 5 அன்று கட்சி ஒற்றுமைக்காக பிரிந்தவர்களை இணைக்க 10 நாள் காலக்கெடு விதித்திருந்தார். இதை கட்சி விரோதமாகக் கருதி, அக்டோபர் 31 அன்று நீக்க அறிவிப்பு வெளியானது.இதனையடுத்து, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், செங்கோட்டையனை நீக்கியதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர் “செங்கோட்டையனை நீக்கும் அளவு எடப்பாடி பழனிச்சாமிக்குத் தகுதி இல்லை. அதிமுகவின் அழிவை எடப்பாடி பழனிச்சாமியே தேடிக் கொள்கிறார்” என்று கூறினார். செங்கோட்டையன், எம்ஜிஆர் காலத்தில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, ஜெயலலிதா அணிக்கு பலம் சேர்த்த தீவிரமான தொண்டன், திறமையான நிர்வாகி என்று புகழ்ந்தார். “அவர் நீக்கப்பட்டதற்கு வருத்தப்படக் கூடியவர் இல்லை. ஏனென்றால் அங்கு எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக இல்லை, எடப்பாடி திமுகதான் உள்ளது” என்று விமர்சித்தார்.
மேலும், தினகரன், “வினாச காலே விபரீத புத்தி” என்று சமஸ்கிருதத்தில் கூறி, எடப்பாடி கொள்ளிக் கட்டையைத் தலையில் சொரிந்து கொள்வதாக விமர்சித்தார். செங்கோட்டையன் பசும்பொன் வந்தது அரசியலுக்காக அல்ல, ஜெயலலிதா இருந்தபோது தேவர் நினைவிடத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்த அதே நினைப்பில் வந்தார் என்று விளக்கினார். “எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்தைத் தாண்டி எதுவும் இல்லை. தகுதியில்லாத அவர், தகுதி உள்ள மூத்த நிர்வாகிகளை நீக்குகிறார்” என்று குற்றம் சாட்டினார். “அவருக்கு பதவி கொடுத்து சிறைக்குச் சென்ற எங்கள் சித்தியையே (சசிகலா) துரோகி என்று சொல்கிறார்” என்று சாடினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மோசமான தோல்வியைச் சந்திப்பார் என்று தினகரன் எச்சரித்தார். “கடந்தமுறையைவிட மோசமான தோல்வியை தென் தமிழகத்தில் சந்திப்பார். தென் தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்” என்று கூறினார். “ஆயுதத்தை போர்க்களத்தில் தான் எடுக்க வேண்டும். போர் வருவதற்கான சூழல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
மேலும், இப்போது இருப்பது அதிமுக அல்ல, எடப்பாடி EDMK என்று சாடினார். முடிவாக, தினகரன், செங்கோட்டையன் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என்று புகழ்ந்து, எடப்பாடி தனது அழிவைத் தானே தேடிக் கொள்கிறார் என்று கூறினார். “நாங்கள் வீழ்த்த வேண்டும் என்ற தேவையில்லை, அவரே வீழ்ந்து விடுவார்” என்று எச்சரித்தார்.
