“விஜய்யை எதிர்கால முதலமைச்சராக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர்” – செங்கோட்டையன்!

தவெகவுக்கு தன்மானம் இருக்கிறது விஜய்யை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :தமிழக வெற்றிக்கழகத்தின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தலைவர் விஜய்யை தமிழ்நாட்டின் எதிர்கால முதலமைச்சராக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். “பல உயர்மட்டங்களிலிருந்து, திரைப்பட உலகிலிருந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்கள் பணிக்காக வருகை தந்துள்ளார். மக்களும் அவரைத்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதை யாராலும் மாற்ற முடியாது” என்று அவர் வலியுறுத்தினார்.

செங்கோட்டையன் மேலும் கூறியதாவது, “நேற்று எங்கள் ஊரில் மூன்று இடங்களில் முகாம் நடத்தினோம். ஆர்ப்பரித்து வரும் மக்கள் வெள்ளத்தை பார்த்தோம். எம்ஜிஆர் காலத்தில் பார்த்தது போல, அம்மா இயக்கம் தொடங்கியபோது பார்த்தது போல இன்று மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். புதிதாக ஒருவர் வர வேண்டும், நல்லாட்சி தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.

தற்போதைய சூழலை விமர்சித்த செங்கோட்டையன், “சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்கள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகிறார்கள். தொழில்துறையினர் அச்சத்துடன் வாழ்கிறார்கள். மீண்டும் திமுக ஆட்சி வரக்கூடாது என்று எல்லோரும் தெளிவாக உள்ளனர். ஆனால் ஒரு மாற்றத்தை உருவாக்கும் திறன் இவருக்கு மட்டுமே உள்ளது, வேறு யாருக்கும் இல்லை” என்று தலைவர் விஜய்யை புகழ்ந்தார்.

பவன் குமார் விஜய் கூட பேசியது போன்ற செய்திகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டார். “நேற்று அவர் அழைக்கப்பட்டார். உடனடியாக உரிய பதிலை அளித்தார். தலைவரை முதலமைச்சர் என்ற நிலையில் மக்கள் பார்க்கிறார்கள். எல்லோரும் அதில் உறுதியாக உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.NDA கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செங்கோட்டையன், “கூட்டணி குறித்து கட்சியில் எந்த விவாதமும் நடைபெறவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.

தவெக தனித்து நிற்கும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும், மக்களின் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.இந்த பேச்சு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் வேட்பாளராக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார் என்ற நம்பிக்கையை செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.