விஷமாகும் செய்தித்தாள் பார்சல்! உணவு பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி தடை!

ஹோட்டல் நடத்துபவர்கள் மற்றும் பொதுமக்கள் உணவுப் பொருட்களைப் பார்சல் செய்யச் செய்தித்தாள்களுக்குப் பதிலாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட உணவுத் தரத்திலான பேப்பர்கள் (Food-grade papers) அல்லது பாரம்பரிய வாழை இலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : நம்மூரில் ரோட்டோரக் கடைகளில் சூடான வடை, பஜ்ஜி, சமோசாக்களை செய்தித்தாள்களில் (Newspapers) வைத்துத் தருவதையும், எண்ணெயை வடிக்க செய்தித்தாளைப் பயன்படுத்துவதையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். ஆனால், இந்த எளிய பழக்கம் நம்மளுடைய உடல்நலத்தை மெல்ல மெல்லக் குறைக்கும் விஷமாக மாறிவருகிறது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) எச்சரித்துள்ளது.

சமீபத்தில் மும்பையில் ஒரு பிரபல வடா பாவ் (Vada Pav) கடைக்காரர் செய்தித்தாள்களைப் பயன்படுத்தியதால், FSSAI மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து அந்தக் கடையின் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அதைத் தொடர்ந்து, தற்போது இந்தியா முழுவதும் இந்தத் தடை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தித்தாளில் உள்ள அச்சு மையில் (Printing Ink) ஈயம் (Lead), கிராபைட், தீங்கு விளைவிக்கும் வண்ணங்கள் மற்றும் பினாயில் போன்ற ஆபத்தான கன உலோகங்கள் (Heavy Metals) உள்ளன.

சூடான மற்றும் எண்ணெய் பசையுள்ள உணவுகளை செய்தித்தாளில் வைக்கும்போது, அந்த எண்ணெய் ஒரு ‘solvent’ போலச் செயல்பட்டு, பேப்பரில் உள்ள அச்சு மையை மிக வேகமாக உறிஞ்சி உணவோடு கலந்துவிடுகிறது. இதற்கு 'லீச்சிங்' என்று பெயர். செய்தித்தாள்கள் மட்டுமல்லாமல், மறுசுழற்சி செய்யப்பட்ட கார்ட்போர்டு பெட்டிகள் (Recycled Cardboard) மற்றும் பழைய புத்தகப் பக்கங்களில் உணவுகளைப் பொட்டலமிடுவதும் சட்டப்படி குற்றமாகும்.

இதனால் என்னென்ன நோய்கள் வரும்?

இந்த அச்சு மை கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது, உடலில் நச்சுத்தன்மை (Toxicity) அதிகரித்து பின்வரும் பாதிப்புகள் ஏற்படலாம்:

  • செரிமானக் கோளாறுகள் மற்றும் கடுமையான வயிற்று உபாதைகள்.
  • சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு அபாயம்.
  • நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடுள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புற்றுநோய் (Cancer) ஏற்படும் அபாயம் மிக அதிகம் என FSSAI எச்சரிக்கிறது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (பேக்கேஜிங்) ஒழுங்குமுறைச் சட்டம் 2018-ன் படி (Food Safety and Standards Regulations, 2018), உணவுகளைச் சேமிக்கவோ, பார்சல் செய்யவோ செய்தித்தாள்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் பல இடங்களில் முக்கியமாக டீகடைகளில் செய்தித்தாள்களில் தான் பார்சல் கொடுக்கப்பட்டு வருகிறது.

மாற்று வழி என்ன?

"செய்தித்தாள் விலை மலிவு, வேறு எதைப் பயன்படுத்துவது?" என்ற கேள்வி சிறு வியாபாரிகளிடம் எழலாம். அதற்கு மாற்றாக தரமான பட்டர் பேப்பர் (Butter Paper) அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட உணவுத் தர பேப்பர்களை (Food-grade Packaging Material) பயன்படுத்த வேண்டும். எண்ணெயை வடிக்க செய்தித்தாளுக்குப் பதிலாக, மலிவு விலையில் கிடைக்கும் பிரத்யேக அப்ஸார்பண்ட் பேப்பர்களை (Absorbent Paper/Tissue) பயன்படுத்த பழக வேண்டும்.

விஷமாகும் செய்தித்தாள் பார்சல்! உணவு பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி தடை!