டெல்லி : இந்திய டி20 கிரிக்கெட் அணியில் கடந்த டிசம்பர் 2023-க்கு பிறகு ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer), திடீரென வரவிருக்கும் அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணங்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அவரது சிறப்பான பேட்டிங் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்திய கேப்டன்சி திறமைக்காக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், தேர்வுக்குழுவின் இந்த அதிரடி முடிவை முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கேள்வி என்ன?
சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Sony Sports) விவாதத்தில் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தேர்வுக்குழுவின் இந்த முடிவை ஒரு "விசித்திரமான தேர்வு" என்று குறிப்பிட்டுள்ளார். இடமே இல்லாதவருக்கு கேப்டன்சியா? "கடந்த சில மாதங்களாக இந்திய டி20 அணியில் ஒரு சாதாரண வீரராகக் கூட இடம் பிடிக்க முடியாத ஒருவரை, திடீரென நேரடியாக இந்திய அணியின் கேப்டனாக அறிவித்திருப்பது வியப்பாக உள்ளது.
ஒரு வீரரை கேப்டனாகவோ அல்லது துணைக் கேப்டனாகவோ போடும்போது, முதலில் அவருக்கு பிளேயிங் லெவனில் (Playing 11) நிரந்தர இடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்." என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயரை விட, மற்றொரு இளம் நட்சத்திரம் தான் இந்திய அணியை நீண்ட காலம் வழிநடத்த தகுதியானவர் என மஞ்ச்ரேக்கர் வாதாடுகிறார்.
"இந்திய டி20 அணியை நீண்ட காலம் (Long-term) வழிநடத்துவதற்கு ஸ்ரேயாஸ் ஐயரை விட சுப்மன் கில் (Shubman Gill) தான் தகுதியானவர். வரவிருக்கும் டி20 போட்டிகள் இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் அடுத்த டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வெளிநாட்டு மைதானங்களில் நடக்கவுள்ளன. அந்தச் சூழல்களுக்கு கில்லின் பேட்டிங் ஸ்டைல் தான் கேப்டன்சிக்கு சரியாக இருக்கும்" எனவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
சுப்மன் கில் வாய்ப்பை இழந்தது ஏன்?
இந்திய அணியில் ஏற்கனவே ஓப்பனிங் ஸ்லாட்டில் (Opening slots) வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். மேலும், வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் லெஃப்ட்-ஹேண்ட் ஓப்பனர்களின் வரவால் டாப் ஆர்டரில் கடுமையான போட்டி நிலவுகிறது.
சுப்மன் கில் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பதால், அவரை அணியில் சேர்க்க வேண்டுமென்றால் ஃபார்மில் இருக்கும் மற்றொரு ஓப்பனரை நீக்க வேண்டும். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் (Middle Order) சுலபமாகப் பொருந்தக்கூடியவர். இதனாலேயே, பிளேயிங் லெவனில் எளிதாக வைக்கக்கூடிய ஒருவரைத் தேர்வுக்குழு கேப்டனாகத் தேர்ந்தெடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
