சென்னை :திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, திருவல்லிக்கேணி காவல்துறையினர் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது மகன் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் ஒரு பகுதியாக நடைபெற்றது. குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் ஐ.பி. செந்தில்குமாரின் அறையை சோதனை செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றபோது, அறை பூட்டப்பட்டிருந்தது.
சுமார் 4 மணி நேர காத்திருப்புக்குப் பிறகு, பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனை அத்துமீறல் எனக் கருதி, சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் திண்டுக்கல், மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐ. பெரியசாமியின் வீடுகள் மற்றும் அவரது மகள், மகன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன. இந்த நடவடிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
