திருப்பூர்:உடுமலை அருகே படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ரூ.30 லட்சம் நிதியுதவியையும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அடிதடி பிரச்னையை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேலை 3 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் போலீசாருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிதியுதவி, சண்முகவேலின் குடும்பத்திற்கு ஆதரவாகவும், அவர்களின் இழப்பிற்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் வழங்கப்படுகிறது. மேலும், முதலமைச்சர் சண்முகவேலின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் பணியாற்றிய தந்தை-மகன் இடையே மோதல் ஏற்பட்டதாக அவசர எண் 100க்கு வந்த அழைப்பு வந்துள்ளது. அப்பொழுது, ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ. சண்முகவேல், காவலர் ஒருவருடன் சென்று சமாதானம் செய்துவைத்துவிட்டு திரும்பியபோது கொலை செய்யப்பட்டார்.
சம்பவ இடத்தில் உடன் சென்ற காவலர் அழகுராஜ் வாகனத்திலேயே அமர்ந்த நிலையில், சண்முகவேல் தனியாக சென்று விசாரித்ததாக கூறப்படுகிறது. பின்னர், எஸ்.ஐ. சண்முகவேலை மர்மநபர்கள் வெட்டிக் கொன்றதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை மூர்த்தி, மகன் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.
