சென்னை :சசிகலா தமிழக அரசியலில் தனது புதிய பயணத்தை முழுமையாகத் தொடங்கியுள்ளார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும், அதிமுகவின் முன்னாள் முக்கிய தலைவராகவும் இருந்த சசிகலா, ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இன்று சென்னை போயஸ் கார்டனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
கட்சியின் பெயர்:அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்இந்தக் கட்சியை ஒரு தொண்டர் ஏற்கனவே தொடங்கியிருந்தார் என்றும், தான் அதில் இணைந்து கொண்டு தலைமை ஏற்றுள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார். “ஒரு தொண்டர் அம்மா மேலும் தலைவர் மேலும் விசுவாசமாக இருந்து கட்சி ஆரம்பித்தார். அதை நான் ஏற்றுக்கொண்டு இணைந்துள்ளேன்” என்று அவர் விளக்கினார்.
கட்சியின் தேர்தல் சின்னமாக தென்னந்தோப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா இதுகுறித்து பேசுகையில், “இது ஒற்றுமை, கூட்டு குடும்பம், மக்களோடு இருப்பது என்ற கருத்துகளை குறிக்கிறது. இது மக்களுக்கான சின்னம். நாங்கள் எப்போதும் ஒற்றுமையை விரும்புகிறோம். இந்த சின்னம் ஒரு கூட்டு குடும்பம் போல அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று சசிகலா உறுதியளித்தார். “இது உங்கள் வீட்டு சின்னம். மக்கள் நிச்சயம் எங்களோடு இருப்பார்கள்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியை சசிகலா கடுமையாக விமர்சித்தார். “தமிழ்நாட்டு மக்களை திமுக கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பார்த்த நான், இதற்கு ஒரு முடிவு கட்டும் எண்ணத்தில் புதிய கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தேன்” என்று அவர் உரையாற்றினார். அதிமுகவிலிருந்து விலகிய பின்னர் சசிகலாவின் அரசியல் நகர்வுகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன. 2026 தேர்தலில் தென்னந்தோப்பு சின்னம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.
