தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன்! விஜய் கொடுத்த பொறுப்பு?

செங்கோட்டையனுக்கு‌ ஈரோடு‌, கோவை , நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Featured image

சென்னை :தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக வெடித்துள்ள விஷயம் தான் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இணைந்தது. நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார்.

இந்த சம்பவம் அதிமுகவுக்கு கடுமையான அடியாக அமைந்துள்ளது. அதிமுகவில் நீண்டகாலமாக பயணம் செய்த செங்கோட்டையன், கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அக்கட்சியில் பணியாற்றி வந்தவர். 2016-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவர் கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டார். கடந்த சில மாதங்களாக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களான சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என அவர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கைக்கு கட்சி தலைமை கோபமடைந்தது. பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின்போது, செங்கோட்டையன் சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை சந்தித்து கட்சி ஒன்றிணைப்பு குறித்து பேசினார். இந்த சந்திப்பு தெரிந்ததும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உடனடியாக செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். அடிப்படை உறுப்பினர் உட்பட அவரது அனைத்து உறுப்பினர்களையும் நீக்கியது அதிமுகவின் இந்த நடவடிக்கை, செங்கோட்டையனுக்கு மனவேதனை ஏற்படுத்தியது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில நாட்களிலேயே, செங்கோட்டையன் தவெகவில் இணையலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று (நவம்பர் 26) அவர் தனது சத்தியமங்கலம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அத்தோடு, பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் இல்லத்தில் சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இன்று பனையூரில் நடைபெற்ற இணைப்பு விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தார். அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் இணைந்தனர்.

நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் 4 மாவட்ட செயலாளர் தவெகவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே, செங்கோட்டைக்கு கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான அமைப்பு செயலாளராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நியமனங்கள், தவெகவின் கொங்கு மண்டலத்தில் உள்ள செல்வாக்கை வலுப்படுத்தும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.