செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை.... மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை. அவரின் பேச்சு குறித்து கருத்து சொல்லவும் எதுவும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Featured image

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது. இன்று (நவம்பர் 27) சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் சேர்ந்தனர். இணைந்த உடனேயே அவருக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “நான் என்று ஒருவன் நினைத்தால், தான் என்று ஆண்டவன் பார்த்துக்கொள்வான், தண்டித்து விடுவான். 50 ஆண்டுகாலம் உழைத்த கட்சியில் இருந்து உறுப்பினர் பதவியைப் பறித்தது எடப்பாடி பழனிச்சாமி எனக்கு கொடுத்த பரிசு. பசும்பொன்னில் தேவர் ஜெயந்திக்குச் சென்று சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. ஆகியோரைப் பார்த்து வந்ததாலேயே என்னை நீக்கினார். அவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று சொன்னதற்கே இந்த நிலை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு, அதிமுகவின் கொங்கு மண்டல செல்வாக்கை பலவீனப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, செங்கோட்டையனின் இந்த நகர்வுக்கு கடுமையான கோபத்துடன் பதிலளித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தவெக இணைப்பு குறித்த கேள்விக்கு “அவர் அதிமுகவில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை… நன்றி, வணக்கம்” என்று குறுக்கிட்டு பேட்டியை முடித்தார்.

முன்னதாக வேறு இடத்தில் பேசுகையில் தவெகவில் ஏன் இணைந்தார் என்று அவரிடமே கேளுங்கள், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்று கூறினார். அதே நேரத்தில், செங்கோட்டையனின் இணைப்பு பற்றி பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதை இலேசாக எடுத்துக்கொண்டு பதிலளித்தார். “செங்கோட்டையன் பின்னால் பாஜக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். அப்படியிருந்தால் அவர் ஏன் தவெகவில் இணைந்து விட்டார்? எங்களுடன் இருந்திருக்கலாம் அல்லவா? இது பாஜக-அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று கூறி, சமூக வலைதளங்களில் எழுந்த யூகங்களை மறுத்தார்.