தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்

Sengottaiyan joined the tvk

சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் முன்னிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று (27-11-2025) தவெகவில் இணைந்தார். நேற்று கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஒரே நாளில் தவெகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பனையூர் தவெக தலைமையகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் விஜய் நேரில் வரவேற்று, செங்கோட்டையனுக்கு கட்சிக் கொடியை அணிவித்தார். செங்கோட்டையனுடன் அவரது நெருக்கமான ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்யபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தனர். கொங்கு மண்டலத்தில் இருந்து தவெக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் குவிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார். இதனால் கட்சித் தலைமையான எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்டு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வு என்னவென பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இன்று தவெகவில் இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பலமான தலைவராக விளங்கிய செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு பெரும் பலம் சேர்க்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும்  செங்கோட்டையன் அவருடைய ஆதரவாளர்களுடன் இணைந்து ஊடகங்களைச் சந்தித்து பேசவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.