சென்னை :மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஒன்பதாவது நினைவு நாளான இன்று (டிசம்பர் 5) சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் வி.கே.சசிகலா மலர்வளையம் வைத்து ஆழ்ந்த மரியாதை செலுத்தினார். கண்ணீருடன் அமைதியாக நின்று வணங்கிய சசிகலா, ஜெயலலிதாவின் படத்தின் முன் கைகூப்பி, “அம்மாவின் ஆசியுடன் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவோம்” என்று உறுதிமொழி ஏற்றார். அவருடன் டிடிவி தினகரன், அவரது குடும்பத்தினர், நீண்ட பல நூறு அதிமுக தொண்டர்களும் உடனிருந்தனர்.
நினைவிடத்திலிருந்து வெளியே வந்த சசிகலா ஊடகங்களிடம் பேசுகையில், “தொண்டர்களே! நீங்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். இந்த ஒற்றுமை இருந்தாலே போதும், நிச்சயம் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம். அதை நிச்சயம் செய்து காட்டுவோம்” என்று உறுதியுடன் தெரிவித்தார். அதிமுகவை மீட்டெடுப்பதே தனது ஒரே இலக்கு என்றும், ஜெயலலிதாவின் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டுவோம் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) சமீபத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சசிகலா , “ஒருத்தர் மேல் இருக்கிற கோபத்தில் அவசரப்பட்டு பெரிய முடிவுகளை எடுக்கக் கூடாது. மக்களுக்காகவே வாழ்ந்த MGR-உம் அம்மாவும் உருவாக்கிய இயக்கத்தில் இருந்து இப்படி முடிவெடுப்பதை… என்ன சொல்றதுனே தெரியல” என்று ஆதங்கத்துடன் பேசினார். செங்கோட்டையனின் முடிவு தவறு என்று நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமாக விமர்சித்தார்.
மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கார்த்திகை தீப விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்வதாகவும் சசிகலா குற்றம் சாட்டினார். “2014-ல் உச்ச நீதிமன்றமே தெளிவான தீர்ப்பு கொடுத்துவிட்டது. அதை மதிக்காமல் திமுக அரசு தேவையில்லாத அரசியல் செய்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதா நினைவு நாளில் சசிகலாவின் இந்த உறுதிமொழியும் பேச்சும், அதிமுக தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
