ஆதரவாளர்களுடன் இன்று தவெகவில் இணையும் செங்கோட்டையன்! பனையூர் புறப்பட்ட விஜய்!

அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இன்று இணைகிறார்.

sengottaiyan joins tvk

சென்னை :தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) சென்னை·பனையூர் தலைமையகத்தில் இன்று பரபரப்பான அரசியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் செல்வாக்கு மிக்க தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று தவெகவில் இணையவுள்ளார். நேற்று தனது கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்த செங்கோட்டையன், இன்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் முன்னிலையில் கட்சியில் இணையவுள்ளார்.

இவருடன் அவரது நீண்டகால ஆதரவாளர்களும் தவெகவில் இணையவுள்ளனர். கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட ஈரோடு·கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பேருந்துகளில் சென்னை பனையூருக்கு வந்திறங்கினர். பலருக்கு இது முதல் முறையாக பனையூர் தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களை தவெகவின் முக்கிய நிர்வாகியான என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) நேரில் கைகொடுத்து உற்சாகமாக வரவேற்றார். “வாங்க… வாங்க…” எனக் கூறி ஆரத்தழுவிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதேநேரம், செங்கோட்டையனின் நெருக்கமான ஆதரவாளரும் முன்னாள் அதிமுக எம்.பி.யுமான சத்யபாமா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் பனையூர் தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தனர். இணையும் விழா தொடங்க இன்னும் சற்று நேரத்தில் தவெக தலைவர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு பனையூர் அலுவலகத்தை வந்தடைந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே விழா தொடங்கவுள்ளது.

ஒரே நாளில் எம்.எல்.ஏ. பதவியைத் துறந்து, புதிய கட்சியில் இணையும் செங்கோட்டையனின் முடிவு தமிழக அரசியலில் பெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பலத்த அடியாகவும், தவெகவுக்கு வலுவான ஊக்கமாகவும் இந்த இணைப்பு அமைந்துள்ளது.