ராமேஸ்வரத்தில் மாணவி கொலை : சமூக விரோதிகளை தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை – அன்புமணி!

திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என அன்புமணி ராமதாஸ் காட்டத்துடன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

anbumani about Rameswaram Student Murder

சென்னை :இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை பகுதியில், 12-ம் வகுப்பு மாணவி ஷாலினி (17), காதலிக்க மறுத்ததால் அதே ஊரைச் சேர்ந்த முனியராஜ் (21) என்பவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நவம்பர் 19, 2025 காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் இந்த கொடூரச் சம்பவம் நடந்தது. முனியராஜ், மீனவர் மாரியப்பனின் மகளான ஷாலினியை சில நாட்களாக காதலிக்க வற்புறுத்தி வந்தார். மாணவி மறுத்ததும், அவர் தந்தையிடம் புகார் அளித்து, முனியராஜை எச்சரித்திருந்தனர்.

ஆத்திரத்தில் முனியராஜ் கத்தியுடன் மறித்து தாக்கி, ஷாலினியை கொலை செய்தார். இந்த சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி (PMK) தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக் கண்டித்து, திமுக ஆட்சியை சாடியுள்ளார். “திமுக ஆட்சியில் சமூக விரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை” என்று அவர் கூறினார். ஷாலினியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், திமுக ஆட்சியின் பொறுப்பின்மை காரணமாக இத்தகைய கொடுமைகள் நடப்பதாக விமர்சித்தார்.

பள்ளி மாணவிகளும், இளம்பெண்களும் பாலியல் சீண்டல், காதல் தொல்லைக்கு ஆளாவதாகவும், PMK தொடர்ந்து பேருந்து நிறுத்தங்கள், பள்ளி-அலுவலகப் பகுதிகளில் காவல் பாதுகாப்பு கோரியும், திமுக அரசு செவிமடுக்கவில்லை என்றும் சாடினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.  அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் சாதனை ஆகும்.

இராமேஸ்வரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும் ” எனவும் அன்புமணி ராமதாஸ் காட்டத்துடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.