சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டி அளித்தார். திருமாவளவன் கூறியதாவது “இன்று மாலை 5 மணிக்கு விசிக உயர்நிலைக்குழு கூட்டம் இணையம் வழியாக நடைபெற உள்ளது.
ஏற்கெனவே அறிவித்தபடி, சமீபத்திய அரசியல் நெருக்கடி குறித்து முன்னணி தோழர்களுடன் கலந்தாய்வு செய்து முடிவு எடுக்கப்படும். முடிவுகள் எடுக்க எனக்கு கட்சித் தலைவர் என்ற பெயரில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்ட பிறகே முடிவு எடுப்பது எனது கடமை.
இன்று மாலை உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, நாளை காலை செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.”மேலும் அவர் கூறுகையில்,“நாங்கள் ஏற்கெனவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பயணித்து வருகிறோம். அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில், தி.மு.க. தலைவர் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து பேசினோம். அப்போது அவர் மனம் திறந்து பேசினார்.
‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். த.வெ.க. ஆட்சி அமைக்க ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம். மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்க வேண்டியது நமது கடமை’ என்று தெரிவித்தார். அந்தக் கருத்துகளைத்தான் நாங்களும் பகிர்ந்து கொண்டோம்” எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் முடிவுகளின்படி தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழலில் விசிக உயர்நிலைக்குழு கூட்டம் முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் விசிகவின் இறுதி நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்தார்.
