கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலன் கைது.!

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை. குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபால் கைது செய்யப்பட்டார்.

Kavin - Surjith

நெல்லை :கவின் ஆணவக் கொலை வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின் (27) கடந்த ஜூலை 27ம் தேதி அன்று நெல்லை கே.டி.சி. நகரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், கவின் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் (காவல் உதவி ஆய்வாளர்) ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.  தற்போது, சிபிசிஐடி போலீசார் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனை இன்று (ஆகஸ்ட் 13) கைது செய்துள்ளனர்.

ஜெயபாலன் இந்தக் கொலைக்கு உதவியதாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிபிசிஐடி, சுர்ஜித் மற்றும் சரவணனை காவலில் எடுத்து விசாரித்த பின்னர், கவினின் காதலி மற்றும் அவரது தாயாரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஜெயபாலனை கைது செய்தது.

பின்னர், அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.