கரூர்:தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார நிகழ்வில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சுகுணா (65) செப்டம்பர் 29 அன்று உயிரிழந்தார். இதனால், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.
இந்த துயரமான சம்பவத்தில் 10 குழந்தைகள், 18 பெண்கள், 13 ஆண்கள் அடங்குவர். காயமடைந்த 110-க்கும் மேற்பட்டோர் கரூர், திருச்சி, மதுரை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, “சுகுணாவின் உயிரிழப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மூலம் முழு சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
மேலும், அதே சமயம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது இந்த சம்பவம் தொடர்பாக 4 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக, இந்த சம்பவத்தை ‘திட்டமிட்ட சதி’ எனக் கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரியுள்ளது. “இது விபத்து இல்லை. சிறப்பு அமர்வு அமைத்து ஆராய வேண்டும்,” என்று இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் கூறினார்.
விசாரணை இன்று மதியம் 2.15 மணிக்கு நடைபெறவுள்ளது. ஓய்வூதிய நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமும், ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த் தலைமையில் தனிப்படையும் ஆய்வு செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
