சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான உத்திகள், கட்சியின் செயல்பாட்டு வேகம், மாற்றுக் கட்சியினரை இணைத்தல், மகளிர் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் அன்புமணி நிர்வாகிகளுக்கு பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கட்சியின் உழைப்பு வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அன்புமணி, “நீங்கள் இப்போது 60 கி.மீ வேகத்தில் பயணிக்கிறீர்கள். இனி 100 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும்” என்று கூறினார். 100 தொகுதிகள் என்ற இலக்கோடு நின்றுவிடாமல், 234 தொகுதிகளிலும் முழு வீச்சில் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீங்கள்தான் தேர்தலில் போட்டியிடப் போகிறீர்கள் என்ற எண்ணத்துடன் வேலை செய்யுங்கள். கூட்டணி பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று நிர்வாகிகளைத் தூண்டினார்.தேர்தல் ஆணையம் தன்னை கட்சித் தலைவராகவும், மாம்பழம் சின்னத்தை பா.ம.க-வுக்கு ஒதுக்கியும் அங்கீகரித்துவிட்டதாக அன்புமணி உறுதியாகத் தெரிவித்தார். “ஏ ஃபார்ம், பி ஃபார்ம் கையெழுத்து போட்டு அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள். நீதிமன்றம் சென்றாலும் ஒன்றும் நடக்காது” என்று நம்பிக்கை அளித்தார்.
மேலும், “ராமதாஸ் அணியினரைப் பற்றி பேசுபவர்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும், “அங்கு இருப்பவர்கள் தினமும் அய்யா பெயரை எடுத்து, திமுகவின் கைக்கூலிகளாகச் செயல்படுகிறார்கள். அதைப் பற்றி பேச வேண்டாம், நம் வேலையைப் பார்ப்போம்” என்றும் அறிவுறுத்தினார்.கட்சியை வலுப்படுத்தும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அன்புமணி, “100 நாள் நடைப்பயணத்தில் பலர் ராமதாஸ் அணியில் இருந்து நம்மிடம் வந்துவிட்டார்கள்.
மீதமுள்ள சிலரையும் பேசி இணைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். முதன்மை எதிரியாக திமுகவையே குறிப்பிட்ட அவர், “நூறு நாட்களில் நமக்கு ஒரே டார்கெட் திமுக மட்டும்தான். அதையே தொடர்ந்து செய்ய வேண்டும்” என்று தெளிவுபடுத்தினார்.கூட்டத்தில் நெகிழ்ச்சியுடன் பேசிய அன்புமணி, “நடைப்பயணத்துக்கு முன்பு ரொம்ப மன உளைச்சலில் இருந்தேன். முருகா எல்லாத்தையும் பார்த்துக்கோன்னு சொல்லிட்டு ஆரம்பிச்சேன். இன்னைக்கு நிம்மதியா, சந்தோஷமா, தைரியமா, தன்னம்பிக்கையோடு இருக்கேன்” என்று கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.
