சென்னை :இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். முதல் கேள்வியாக திமுக 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அவர்களுடைய ஆட்சி எப்படி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
அந்த கேள்விக்கு வெளிப்படையாகவே பதில் சொன்ன பிரேமலதா விஜயகாந்த் ” திமுகவின் இந்த ஆட்சி நிறையும் குறையும் கலந்த ஒரு ஆட்சியாக இருக்கிறது என்று தான் நான் பார்க்கிறேன். ஏனென்றால் இன்னும் அவர்கள் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என மக்கள் கூறும் ஒரு குறை இருக்க தான் செய்கிறது. ஆணவக்கொலைகள் அது மட்டுமில்லாமல் பாலியல் வன்கொடுமைகள், டாஸ் மாக், போதைப்பொருள் கலாச்சாரம், வேலை வாய்ப்பு இல்லை.
அதைப்போல, பல மாநகராட்சியை பார்க்கிறோம் சரியான சுகாதாரம் இல்லை. அரசு மருத்துவமனைகளின் தரம் என்பது மிகவும் மோசமாக இருக்கிறது” எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர் மார்க் எவ்வளவு கொடுப்பீங்க என்பது போல கேள்வி கேட்க சற்று முகம் மாறியபடி பதில் சொன்ன பிரேமலதா ” இது என்ன தேர்வா என்ன மார்க் போடுவதற்கு? என செய்தியாளரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
அப்படி என்றால் 50 % நிறைவு…50 % குறைவு என்று வைத்து கொள்ளலாம். திமுக ஆட்சியில் நிறை குறை என்பது சமமாக இருப்பதால் 50, 50 வைத்துக்கொள்ளுங்கள்” என தெரிவித்தார். மேலும் ஆணவக்கொலை குறித்து தொடர்ந்து பேசிய பிரேமலதா ” இப்படியான கொலை சம்பவங்கள் நடப்பதற்கு மெய்ன் காரணம் என்ன தெரியுமா? ஜாதிவெறி தான். எத்தனை பாரதியார் வந்தாலும்…எத்தனை பெரியார் வந்து சொன்னாலும் ஜாதி வெறி என்பது எங்கேயும் மறையவில்லை” எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
